வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

கைத்தறித் துண்டுக்கு கலால் வரி நீக்கப்படுமா? உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

மத்திய பட்ஜெட்டில் கைத்தறித் துண்டுக்கான கலால் வரி நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் துண்டு உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:20 am

ஜெபலின்ஜான்

மத்திய பட்ஜெட்டில் கைத்தறித் துண்டுக்கான கலால் வரி நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் துண்டு உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.
 வணிக முத்திரை பெறப்பட்ட (பிராண்டட்) கைத்தறித் துண்டுகள் உற்பத்தி மூலம் இந்தியாவில் ரூ. 1,000 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. இதன்மூலம் நேரடியாக 10,000 பேரும், மறைமுகமாக 30,000 பேரும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
 இந்தியாவில் உற்பத்தியாகும் "பிராண்டட்' கைத்தறித் துண்டுகள் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 40 சதவிகிதம். அடுத்து மேற்குவங்கம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் கைத்தறித் துண்டுகளை அதிகமாக உற்பத்தி செய்கின்றன.
 2011-12-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கலால் வரி பிரிவில், "பிராண்டட் ஹனிகோம்ப் டவல்' என்ற கைத்தறி நூலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் துண்டுகள் மீது கலால் சட்டத்தின் படி 12.36 சதவிகிதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளதால் துண்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 துண்டுகள் நெய்வதற்கான கைத்தறி நூல் 220 கவுன்ட், 110 கவுன்ட் கழிவு பஞ்சு நூல் மூலமாக தயாரிக்கப்படுகிறது. இதற்கான மூலப்பொருள்களுக்கு கலால் வரியோ, மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியோ (வாட்) இல்லை. எனவே, மத்திய கலால் வரி 12.36 சதவிகிதத்தில் 70 சதவிகிதம் கழிதல் போக மீதி 3.708 சதவிகிதம் கட்டும்போது, கட்டப்பட்ட வரியை உள்ளீட்டு வரி வரவாக எடுக்கவும் இயலாது.
 தற்சமயம் நூல் விலை உயர்வாலும், பதனிடும் தொழிலில் உற்பத்திச் செலவு அதிகமானதாலும், கலால் வரியும் கட்டுவதால் நுகர்வோருக்கு ஒரு துண்டுக்கு ரூ. 6 வரை அதிகரிக்கிறது. எனவே, வரிவிலக்கு அளிக்கப்பட்டவர்களுடன் பிராண்டட் கைத்தறித் துண்டு உற்பத்தியாளர்களால் போட்டியிட முடியாத நிலை உருவாகிவிட்டது.
 இது குறித்து ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்த கைத்தறித் துண்டு உற்பத்தியாளர் கே.எஸ்.சண்முகசுந்தரம் கூறியது:
 5 கிலோ நூலில் இருந்து 30 இன்ச் அகலம், 60 இன்ச் நீளம் கொண்ட துண்டினை 22 எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும். 5 கிலோ நூலின் விலை ரூ. 1,010. இதற்கு சாயம் பதனிடுதல், நெசவுக் கூலி, முடிபோடுதல் கூலி, பேக்கிங் செய்தல், போக்குவரத்து செலவு என ரூ. 1,465 செலவு ஆகிறது.
 ஒரு துண்டின் அடக்க விலை ரூ. 100. அதன் அதிகபட்ச சில்லரை விலை ரூ. 150. மொத்த விற்பனையாளர்களுக்கு 20 துண்டுகள் ரூ. 2,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
 20 துண்டுகள் மீதான கலால் வரியாக (அதிகபட்ச சில்லறை விலை மீது) ரூ. 111.24 கட்ட வேண்டியுள்ளது. இந்த கலால் வரி நுகர்வோர் மீது தான் சுமத்தப்படுகிறது.
 இதன்மூலம் உற்பத்தியாளர்களுக்கான அடக்கவிலை (20 துண்டுகளுக்கு) ரூ. 1,5,76 ஆகிவிடுகிறது. இவற்றின் விற்பனை விலை ரூ. 2,000. இதில் இருந்து லாபமாக ரூ. 424 மட்டுமே கிடைக்கிறது.
 பிற ஜவுளி ரகங்களை ஒப்பிடும்போது பிராண்டட் கைத்தறித் துண்டு உற்பத்தியாளர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கிறது. இப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நூல்கள் விலை மேலும் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளதால், துண்டு உற்பத்தியாளர்களுக்கு மேலும் நெருக்கடி உருவாகியுள்ளது.
 எனவே, வரும் பட்ஜெட்டில் கலால் வரியை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன் கூறியது:
 மூலப்பொருள்களின் மீது எந்த வரியும் இல்லாதபோது அதன்மூலம் தயாராகும் பொருள்களுக்கு மட்டும் வரி விதிப்பது நியாயமற்ற செயல். கிட்டத்தட்ட 40,000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் துண்டு உற்பத்தித் தொழில், தற்சமயம் ஜவுளித் தொழிலில் நிலவும் சிக்கலாலும், தொடர் மின்வெட்டாலும் அபரிமிதமான டீசல் விலை உயர்வாலும் நசிவைச் சந்தித்து வருகிறது.
 எனவே, கைத்தறித் துண்டுகள் மீதான கலால் வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மனு அனுப்பியுள்ளோம். இந்த பட்ஜெட்டில் துண்டுகள் மீதான கலால் வரியை நீக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.